விளையாட்டு

இலங்கைக் கிரிக்கெட் முழுமையாக ஒரு தலைமுறையினையே அழித்து விட்டது.. – மாலிங்க ஆதங்கம்..

இலங்கைக் கிரிக்கெட் ஆனது முழுமையாக ஒரு தலைமுறையினையே இழந்து விட்டது என இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கிரிக்கெட் அணி அண்மைக் காலமாக கண்டுவரும் தொடர் தோல்விகளால் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்ற, இந்நிலையில் கிரிக்கெட்டை மீட்டெடுப்பதற்கான விசேட செயலமர்வை நடத்த விளையாட்டுத்துறை அமைச்சு முடிவு செய்தது.

குறித்த செயற் திட்டம் கடந்த 15ம் திகதி கொழும்பு வோர்ட்டஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

“.. இலங்கைக் கிரிக்கெட்டிலிருந்து ஒரு தலைமுறையையே நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதில் சிக்கக் கொண்டவர்கள் தான் ஜெஹான் முபாரக், திலின கண்டம்பே, மலிந்த வர்ணபுர, சாமர சில்வா, கௌஷால் வீரரத்ன போன்ற வீரர்கள். இவர்கள் மட்டுமல்ல, இன்னும் பலர் இருக்கிறார்கள்.

இப்படியொரு தலைமுறை தேசிய அணிக்கு வருவதற்கு கழக மட்டத்தில் 8 அல்லது 9 வருடங்கள் விளையாடியவர்கள்.

அப்படி பல போராட்டங்களுக்குப் பிறகு தேசிய அணிக்கு வந்து சர்வதேச அளவில் 2 வருடங்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது ஒரு சில காரணங்களால் அவர்களை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்த நேரத்தில் நாம் சரியான நடைமுறையை கையாளவில்லை. அவர்களின் திறமைகள் மங்கியதால் நீக்கப்பட்டார்கள் என்றால், அவர்களின் திறமை ஏன் குறைந்தது என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப அவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை திறமையான வீரர்களாக உருவாக்கியிருக்க வேண்டும்.

அவர்களின் அனுபவத்தோடு பயிற்சியாளர்கள் அதை இலகுவாக செய்திருக்கலாம். ஆனால் அதை யாரும் செய்யவில்லை.

வெளியிலிருந்து வரும் கருத்துக்களுக்கும், மக்களின் கருத்துக்களுக்கும் செவிசாய்த்து இளையவர்களை அணிக்கு கொண்டு வந்து விளையாட விட்டு தாங்கள் பிரகாசித்தார்களே தவிர இந்த வீரர்களை வளர்த்தெடுத்து அணியை பலப்படுத்த நினைக்கவில்லை..” என்றும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

ராஜிவ் காந்தி மைதானம் சிகிச்சைக்கு

wpengine

3வது நாளாகவும் தொடருகிறது ஆஸி – இலங்கை இறுதி டெஸ்ட்.

wpengine

அணிகள் மற்றும் வீரர்களுக்கான புதிய தரவரிசை

wpengine