உள்நாட்டு செய்திகள்

நல்லாட்சியிலும் முஸ்லிம்களுக்கு திருப்தியில்லை – அ.இ.மக்கள் காங்கிரஸின் இளைஞர் அமைப்பாளர்

முஸ்லிம் மக்களின் அதிகபட்ச ஆதரவுடன் ஆட்சி பீடமேறிய நல்லாட்சி அரசாங்கம், முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் வகையில் செயற்படுவதாகத் தெரியவில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் அமைப்பாளர் அன்வர் நெளஷாத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, “மக்களின் அன்றாட வாழ்வும், சகஜ வாழ்க்கையும் இயல்பு நிலைக்குத் திரும்புவதன் ஊடாக தமது இன,மத ரீதியிலான அபிலாசைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையின் பேரிலேயே இன்றைய அரசு ஆட்சிக்கு வந்தது.

அதிலும் விசேடமாக சிறுபான்மை மக்களின் தெரிவாகவே இவ்வரசு இயங்கி வருகின்றது. இந்நிலையில் முஸ்லிம்களுக்கு நம்பிக்கையூட்டக் கூடிய செயற்பாடுகள் மிகக் குறைந்தளவே காணப்படுகின்றது.

குறிப்பாக ஐ.நா வின் பரிந்துரைகளை எமது நாட்டின் இறைமையினை மீறாதவாறு செயற்படுத்துவதற்கான ராஜதந்திர நடவடிக்கைகளில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகுந்த மனவேதனைக்குரிய விடயமாகும்.

பிரதம மந்திரி மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோர் இவ்விடயத்தில் ஒரே போக்கைக் கொண்டிருப்பதாகவே தோன்றுகின்றது. முஸ்லிம்களை ஒரு அப்பாற்பட்ட பிரஜைகளாக கொண்ட ஒப்பந்தங்கள் இலங்கையின் இனப்பிரச்சனை வரலாற்றில் தோல்வியடைந்தமை வரலாற்று உண்மை.

ஐக்கிய தேசியக் கட்சி அரசு ஏற்கனவே உள்நாட்டுப் போராளிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் முஸ்லிம்களை புறக்கணித்தே நடந்துள்ளது. இந்தப் பயத்தோடுதான் நாம் நல்லாட்சி அரசை நோக்க வேண்டியுள்ளது.

உள்நாட்டு போரின்போது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் அவர்களின் மீள்குடியிருப்பு, அதிகார அலகுகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றிய தெளிவான வரைவுகள் இன்றிய ஜெனிவா அறிக்கையானது நிரந்தர தீர்வுக்கான வழிமுறைகளல்ல என்பதுவும் தெளிவான உண்மையாகும்.

கிழக்கில் நடந்த இடம்பெயர்வுகள் அண்மித்த பிரதேசங்களோடு சங்கமித்து விட்ட நிலையில், வடக்கில் இடம்பெற்ற மாபெரும் இடப்பெயர்வு குறித்த நியாயங்கள், நியாயத்துக்கான குரல்கள் இந்த நேரத்தில் ஒலிக்கா விட்டால், அவை எப்போதும் ஒலிக்கவே தேவை இல்லை என்பதே முஸ்லிம் சமூகத்தின் அடிமட்ட அங்கத்தவன் ஒவ்வொருவனதும் நிலைப்பாடாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

போலி தகவல்களை வழங்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

wpengine

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ரத்னம் விக்னேஸ்வரன், பதவி இடைநிறுத்தம்…

wpengine

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 350 மில்லியன் டொலர் கடனுதவி..!

wpengine